இரண்டு கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை கோலார் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

இரண்டு கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2018-09-15 23:00 GMT
கோலார் தங்கவயல், 

இரண்டு கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோலார் மாவட்டம் மாலூர் டவுன் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவள் 15 வயது சிறுமி.

கல்லால் தாக்கி சிறுமி கொலை

இந்த சிறுமி மாலூர் டவுனில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டுவிட்டு சிறுமி, தனது தோழியுடன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தாள்.

அவர்கள் மாலூர் டவுன் ரெயில் நிலைய மேம்பாலத்தின் கீழ்பகுதியில் வந்த போது அங்கு வந்த மர்மநபர், சிறுமி கையை பிடித்து இழுத்து கற்பழிக்க முயன்றார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டாள். அப்போது ஆத்திரம் அடைந்த மர்மநபர், சிறுமியின் தலையில் கல்லால் தாக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின், தோழி அங்கிருந்து ஓட்டம் பிடித்து வீட்டிற்கு சென்று விட்டாள். இந்த நிலையில் கல்லால் தாக்கியதால் சிறுமி அங்கேயே மயங்கி விழுந்தாள். அவளை மர்மநபர் கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். சிறிது நேரத்தில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து மாலூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமியின் வீட்டின் எதிரே புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த கோலார் அருகே தேக்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்கிற சூரி (வயது 25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

கைது

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி சுரேஷ்குமார் தேக்கல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருப்பதாக மாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சுரேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது சிறுமி மீது கொண்ட மோகத்தால், பள்ளி முடிந்து வந்த சிறுமியை கல்லால் தாக்கி மயக்கம் அடைய செய்ததும், பின்னர் சிறுமியை சுரேஷ்குமார் கற்பழித்ததும், இதில் மாணவி இறந்ததும் தெரியவந்தது. பின்னர் வெளியூருக்கு தப்பிச்சென்று சுரேஷ்குமார் தலைமறைவாக முயன்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

46 சாட்சிகளிடம் விசாரணை

மேலும் அவர் மீது கோலார் மாவட்ட கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 23-ந் தேதி கோலார் மாவட்ட கோர்ட்டில் கொலை தொடர்பாக 207 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். மேலும் நீதிபதி பி.எஸ்.ரேகா கொலை தொடர்பாக 46 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்.

தூக்கு தண்டனை

அப்போது சுரேஷ்குமார், சிறுமியை கற்பழித்து கொலை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு 15-ந் தேதி(அதாவது நேற்று) வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று காலை இந்த வழக்கில் நீதிபதி பி.எஸ்.ரேகா தீர்ப்பை வாசித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ்குமாருக்கு தூக்குத தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் தண்டனை விதிக்கப்பட்ட சுரேஷ்குமாரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

மற்றொரு வழக்கு

அதுபோல் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா குப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முனிகிருஷ்ணா, நாராயணசாமி, அனில்குமார், கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 28-ந் தேதி 17 வயது நிரம்பிய மைனர் பெண் ஒருவரை கடத்தி கூட்டாக கற்பழித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மைனர் பெண்ணை கற்பழித்த முனிகிருஷ்ணா, நாராயணசாமி, அனில்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

4 பேருக்கு தூக்கு

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோலார் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி பி.எஸ்.ரேகா தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 4 பேருக்கு மரண தண்டனை விதித்தார். அவர்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

2 கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டதால் கோலார் கோர்ட்டு வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக இந்த வழக்குகளின் தீர்ப்பை அறிய ஏராளமானோர் கோர்ட்டு வளாகத்தில் கூடியிருந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்