நீலகிரி மாவட்டம் முழுவதும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த வேண்டும், நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் முழுவதும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-09-16 22:15 GMT

பந்தலூர்,

தமிழக முதல்–அமைச்சர் மற்றும் பார்வை இழப்பு தடுப்பு திட்ட இயக்குனர் ஆகியோருக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வட்டார சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 நகர்புற சுகாதார நிலையங்கள் உள்ளன. மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையாக வசித்து வரும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சுகாதார நிலையங்களிலேயே பெரும்பாலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் கீழ் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியின் கண் மருத்துவ பிரிவு குழுவினர் இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வந்தது. அதில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்போது முகாம்கள் நடத்தப்படுவது இல்லை.

வட்டார சுகாதார மையங்களில் பணிபுரியும் கண் மருத்துவ உதவியாளர் மூலம் மட்டுமே இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நெலாக்கோட்டையில் உள்ள வட்டார சுகாதார மையத்தில் கண் மருத்துவ உதவியாளரே இல்லை. இதனால் கண் நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. மேலும் பலர் கண் புரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கண் நோய்களுக்கு சிகிச்சை பெறுவது மிகவும் சிரமம். எனவே நீலகிரி மாவட்டம் முழுவதும் இலவச கண் சிகிச்சை முகாம்களை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்