ஓய்வுபெற்ற சுங்க அதிகாரியை மிரட்டி நகை-பணம் பறிப்பு

ஓய்வுபெற்ற சுங்க அதிகாரியை மிரட்டி நகை மற்றும் பணம் பறித்த வழக்கில் கோவையை சேர்ந்தவர் உள்பட 2 பேரை, திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-09-20 21:30 GMT
திண்டுக்கல், 


திண்டுக்கல் எல்.ஜி.பி. காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). இவர் ஓய்வுபெற்ற சுங்கத்துறை அதிகாரி ஆவார். இவருக்கு சொந்தமான வீடு மதுரையில் உள்ளது. இந்த நிலையில் ராஜாவை, 2 பேர் சந்தித்து பேசினர். அப்போது மதுரையில் உள்ள ராஜாவின் வீட்டை வாங்க விரும்புவதாக தெரிவித்தனர். மேலும் வீட்டை பார்க்க வேண்டும் என்று ராஜாவை அழைத்துள்ளனர்.

அதை உண்மை என நம்பிய ராஜா, அவர்களுடன் காரில் மதுரைக்கு சென்றுள்ளார். மதுரைக்கு சென்றதும் அந்த 2 பேரும் ராஜாவை மிரட்டி வீட்டை எழுதி தரும்படி கேட்டுள்ளனர். இதற்கு ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜா அணிந்து இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை அவர்கள் பறித்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் இருவரும் ராஜாவை காரில் அழைத்துச்சென்று தாராபுரத்தில் இறக்கி விட்டு தப்பிச்சென்றனர். அப்போது ராஜாவிடம் பணம் இல்லை என்பதால், பயண செலவுக்கு சிலர் பணம் கொடுத்து திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கோவை வெள்ளலூரை சேர்ந்த சத்தியபசுபதி (41), திண்டுக்கல் சின்ன பள்ளப்பட்டியை சேர்ந்த குமரேசன் (46) ஆகியோர் ராஜாவிடம் நகை மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்