திருப்புல்லாணி யூனியனில் வளர்ச்சி திட்ட பணிகள்

திருப்புல்லாணி யூனியனில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-09-20 22:00 GMT
கீழக்கரை, 


திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள பிள்ளையார் குளம் ஊருணி ஏற்கனவே ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்ட கலெக்டர் வீரராகவராவ் ஊருணியின் நான்கு பக்கமும் கரையை பலப்படுத்தி மரக்கன்றுகள் நடுவதற்கும், ஊருணிக்கு தண்ணீர் வரும் வரத்துக்கால்வாய், உபரி நீர் வெளியேறக் கூடிய கால்வாய் ஆகியவற்றை முறைப்படுத்தி உபரி நீர் அடுத்துள்ள ஊருணிகளுக்கு சென்றடைய தொடர்பு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

பின்னர் திருப்புல்லாணி-ரெகுநாதபுரம் சாலையில் இருபுறங்களிலும் கிடந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மேதலோடை ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள திறந்தவெளி கிணற்றையும், மேதலோடையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்க வைத்தல் மற்றும் மண் புழு உரம் தயாரித்தல் கூடத்தை பார்வையிட்ட அவர், அதில் ஈடுபட்டு வரும் தூய்மை காவலர்களின் பணியினை வெகுவாக பாராட்டினார். ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாக செயல்பாடுகள் மற்றும் ரூ.1.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாரத பிரதமரின் வீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தினை பார்வையிட்டு அதனை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், அதில் உள்ள 2 அறைகளை அரசு பொது சேவை மையத்திற்கும், கிராம அஞ்சல் செயல்பாட்டிற்கும் ஒதுக்கீடு செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

பின்பு அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்ற அவர் அங்கிருந்த பெண்களிடம் அடிப்படை வசதி குடிமைப் பொருட்கள் வினியோக நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரோஜா, ராஜி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்