ரூ.25 கோடி மதிப்பிலான மரகதலிங்கம் கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டது

தாரமங்கலம் அருகே போலீசார் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்த ரூ.25 கோடி மதிப்பிலான மரகதலிங்கம் கும்பகோணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Update: 2018-09-20 23:57 GMT
ஓமலூர்,

இதுபற்றிய விவரம் வருமாறு:- சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகுசமுத்திரம் பால்பண்ணை அருகே கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மற்றும் போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் ஒரு மரகதலிங்கம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மரகதலிங்கத்தின் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கத்தை தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின்னர் மரகதலிங்கத்தை ஓமலூர் கோர்ட்டுக்கு போலீசார் கொண்டு சென்றனர். அதனை ஒமலூரில் உள்ள கருவூலத்தில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி மரகதலிங்கம் ஓமலூரில் உள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் சிலை கடத்தல் வழக்குகளை கும்பகோணம் கோர்ட்டுக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனால் தாரமங்கலம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கும்பகோணம் கோர்ட்டுக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டன.

இதையடுத்து மரகதலிங்கம் மற்றும் காரை கும்பகோணம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை மரகதலிங்கத்தை கருவூலத்தில் இருந்து ஓமலூர் கோர்ட்டுக்கு எடுத்து வந்து மாஜிஸ்திரேட்டு ரமேஷ் முன்னிலையில் கொண்டு வந்தனர். காரையும் எடுத்து வந்தனர்.

பின்னர் ஓமலூர் கோர்ட்டு அலுவலர்கள் மரகதலிங்கத்தை கும்பகோணம் கோர்ட்டு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணத்துக்கு கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட காரும் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்