பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் : குமாரசாமி அழைப்பு

“எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பா.ஜனதாவுக்கு எதிராக போராட மக்கள் முன்வர வேண்டும்” என்று முதல்-மந்திரி குமாரசாமி அழைப்பு விடுத்தார்.

Update: 2018-09-20 23:59 GMT
ஹாசன்,

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா இரேசாவே அருகே தோட்டிகெரே ஏரிப்பகுதியில் ரூ.10 கோடி செலவில் நீர்ப்பாசன திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணி களுக்கான தொடக்க விழா நேற்று நடந்தது.

விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு நீர்ப்பாசன திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் விழாவில் பேசும்போது கூறியதாவது:-

தோட்டிகெரே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கனமழை பெய்யவில்லை. இதனால் தோட்டிகெரே பகுதியே வறட்சி பாதித்த பகுதிபோல் ஆகிவிட்டது. நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் இந்த பகுதியில் நீர்ப்பாசன திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நீர்ப்பாசன திட்டம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாகும்.

விவசாயக்கடனை தள்ளுபடி செய்தது சரியான முடிவுதான். விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய அரசிடம் பணம் இல்லை என்று சிலர் கூறி வந்தனர். விவசாயக்கடனை தள்ளுபடி செய்வதற்கும், அரசிடம் பணம் இல்லாததற்கும் சம்பந்தம் இல்லை. அரசு பாதுகாப்பாகத்தான் உள்ளது.

எனது(குமாரசாமி) தலைமையிலான ஜனதா தளம்(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். இந்த கூட்டணி ஆட்சி கவிழாது. இதுதொடர்பாக மக்கள் யாரும் ஆதங்கமோ, கோபமோ, ஆத்திரமோ அடைய வேண்டாம். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும்.

தற்போது கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்காக ரூ.9 ஆயிரத்து 450 கோடி அரசிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய வங்கிகளில் விவசாயிகளின் கடன் மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடி ஆகும். அதையும் தள்ளுபடி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சியில் மட்டும்தான் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

ஹாசன் மாவட்டம் முழுக்க, முழுக்க தென்னை விவசாயிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு தென்னை விவசாயம்தான் அதிக அளவில் உள்ளது. ஆனால் பருவமழையினால் ஏராளமான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் தென்னை விவசாயிகள் பெருமளவு நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களின் நலனுக்காக ஒரு தென்னை மரத்துக்கு தலா ரூ.500 என கணக்கிட்டு நஷ்ட ஈடு வழங்க முடிவு செய்திருக்கிறேன்.

நான் ஆட்சியில் இருக்கும்போது, அதாவது இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்வதற்குள் முதியோர் உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்துவேன். எங்களது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள். அவர்களுடைய கனவு பலிக்காது.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். விழாவில் மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, பண்டெப்பா காசம்பூர், கலெக்டர் ரோகிணி சிந்தூரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா தொடங்குவதற்கு முன்பு முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மாநில தலைவருமான எடியூரப்பாவுக்கு வேறு வேலை இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர் எப்போதும் மாநில அரசு மீது குற்றச்சாட்டு சொல்வதேயே வேலையாக வைத்திருக்கிறார். இந்த கூட்டணி ஆட்சிக்கு இதேபோல் அவர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தால், நான் அமைதியாக இருக்க மாட்டேன்.

ஆட்சி நடத்த விடாமல் செய்து கொண்டிருந்தால் நான் பொறுமையாக இருக்க மாட்டேன். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா ஆடும் ஆடுபுலி ஆட்டம் நிறுத்தப்பட வேண்டும். கர்நாடகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வெறும் பா.ஜனதா ஆட்சிதான் இருக்க வேண்டுமா என்ன?.

எடியூரப்பாவுக்கு புத்தியில்லை. நான், தினமும் பா.ஜனதாவின் தொந்தரவை சகித்துக் கொண்டு இருக்க வேண்டுமா? அல்லது கர்நாடக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமா?. எனக்கு மக்களின் நன்மை முக்கியம். அவர்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் பா.ஜனதாவினர் இதேபோல் தொந்தரவு கொடுத்தால் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பேன். நான் யாரையும் குறிப்பிட்டு குற்றம்சாட்டவில்லை. கர்நாடகத்தில் ரவுடிகள் பலர் அரசியல்வாதி என்ற போர்வையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களுடைய பெயர்களை பகிரங்கமாக வெளியிடுவேன்.

குமாரசாமி தலைமையிலான ஆட்சி இன்னும் தங்களது பணிகளை தொடங்கவில்லை என்று பா.ஜனதாவினரும், எடியூரப்பாவும் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனது தலைமையிலான அரசு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதை மக்கள் அறிவார்கள்.

பா.ஜனதாவினர் எனது ஆட்சிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை அவர்கள் கவிழ்க்க முயற்சிகளை மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்