குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா 10–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 10–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2018-09-21 21:30 GMT

குலசேகரன்பட்டினம், 

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 10–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முத்தாரம்மன் கோவில்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 10–ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

அம்மன் வீதி உலா

முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2–ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3–ம் நாளில் ரி‌ஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4–ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5–ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும்,

6–ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7–ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8–ம் நாளில் கமல வாகனத்தில் கசலட்சுமி திருக்கோலத்திலும், 9–ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

மகிஷா சூரசம்ஹாரம்

10–ம் நாளான 19–ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11–ம் நாளான 20–ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளி, சாந்தாபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், அதிகாலை 5 மணிக்கு சுண்டங்கோட்டை சவுந்திரபாண்டிய நாடார்–தங்கக்கனி அம்மாள் கலையரங்கத்திற்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதி உலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

12–ம் நாளான 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகள்

விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மதியம் அன்னதானம் நடக்கிறது. மாலையில் சுண்டங்கோட்டை சவுந்திரபாண்டிய நாடார்–தங்கக்கனி அம்மாள் கலையரங்கில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், பட்டிமன்றம், பாவைக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தல வரலாறு

வெம்மையால் உடலில் தோன்றும் முத்துகளை ஆற வைப்பதால் முத்தாரம்மன் என்றும், முத்துகளை ஆரமாக அணிந்தவள் என்பதால் முத்தாரம்மன் என்றும், பலவாறாக அன்னை பெயர் காரணம் பெறுகின்றாள். அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீசுவரர் சமேதராய் அம்மையும் அப்பனுமாக ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி, மற்ற கோவில்களில் காண இயலாத அற்புத காட்சியாகும். வினை மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து வழிபட்டு, தம் குறைகள் நீங்க பெறுகின்றனர்.

நவ ராத்திரி விழாவே இங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழாவுக்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் தவ வலிமை மிக்கவராய் இருந்தார். ஒரு நாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் வந்தார். அவரை மதிக்க தவறியதோடு அவ மரியாதையும் செய்தார் வரமுனி. இதனால் மனம் நொந்த தமிழ் ஞானி அகத்தியர், வரமுனியை எருமை தலையும், மனித உடலும் பெற்று, இறைவியால் அழிவாயாக என்று சாபமிட்டார்.

அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமை தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். எனினும் அவர் தனது விடாமுயற்சியால் பற்பல வரங்களை பெற்றார். முனிவராக வாழ்வை தொடங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார். மகிஷாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிஷாசுரனின் கொடுமைகளை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் இருந்து தோன்றிய அன்னை பராசக்தி மகிஷாசுரனை அழிக்க புறப்பட்டாள். மகிஷாசுரனை அழித்த 10–ம் நாள் தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடிக் கொண்டாடும் இவ்விழா தமிழகத்திலேயே முதலிடத்தை வகிக்கிறது.

வேடம் அணியும் பக்தர்களுக்கான விதிமுறைகள்

வேடம் அணியும் பக்தர்களின் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும். வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து, அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதுக்கு உட்பட்டவராகவும், 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

மேலும் செய்திகள்