மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-21 22:00 GMT
கும்பகோணம்,


தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் கருணாநிதி, மாவட்ட தலைவர் அயோத்தி மாணிக்கம், மாவட்ட இணை தலைவர் பக்கிரிசாமி, மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் வழங்கும் கடன் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் நிலமற்ற நபர்களுக்கு வழங்கி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இதை கண்டிப்பதுடன், விவசாயிகளுக்கு அரசு அறிவித்தபடி கடனை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை புதிய உறுப்பினராக சேர்த்து உடனடியாக பயிர்க்கடனை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் பூச்சி மருந்து உரம் வழங்க வேண்டும். ரூ.25 ஆயிரம் செலுத்தும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் உடனடியாக வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் செய்வதை முறைகேடுகளை தடுக்கும் வகையில் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை விவசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கும் எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்