மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் - கலெக்டர் கதிரவன் பேச்சு

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் கூறினார்.

Update: 2018-09-21 23:00 GMT
ஈரோடு,

வனத்துறை சார்பில் ஈரோடு மாவட்ட அளவிலான கூட்டு வன மேலாண்மைக்குழு கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தாளவாடி, கடம்பூர், பர்கூர் ஆகிய பகுதிகளின் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள், கல்வி வசதி போன்றவை முறையாக வழங்கப்பட்டு வருகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நில உரிமை சட்டத்தின்படி பட்டா வழங்கப்பட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் சூரிய வசதியுடன் கூடிய மின்விளக்கு வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

உண்டு உறைவிடப்பள்ளி, வீட்டுமனை பட்டா, ரேஷன் கடை, தொகுப்பு வீடுகள், தார்சாலை வசதி, வடிகால் வசதி, சமுதாய நலக்கூடம், துணை சுகாதார நிலையம், தனிநபர் கழிப்பிட வசதி, நடமாடும் ரேஷன் கடை, கால்நடை மருத்துவ முகாம், வேளாண்மை கருவிகள், குடிநீர் வசதி ஆகியன செய்துகொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. வனத்துறையினரிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

மேலும் செய்திகள்