ரூ.114.70 கோடி மதிப்பில் மகப்பேறு திட்ட நிதி உதவி - கலெக்டர் மலர்விழி தகவல்

தாய்மார்களுக்கு ரூ.114.70 கோடி மதிப்பில் மகப்பேறு திட்ட நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி கூறினார்.

Update: 2018-09-21 23:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 97 தாய்மார்களுக்கு ரூ.114.70 கோடி மதிப்பில் மகப்பேறு திட்ட நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி கூறினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறையின் மூலம் பொதுமக்கள் நலனுக்காக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மாதவிடாய் சுகாதார திட்டம், சீரமைக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட நிதி உதவி வழங்கும் டாக்டர். முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம், நகரும் மருத்துவமனை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மகப்பேறு நிதி உதவி வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அ மைச்சர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தர்மபுரி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் தாய்மார்கள் வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 43-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டாக்டர்.முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதற்காகவும், தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் வழங்கப்படுகிறது. பிரசவித்த தாய்மார்கள் ஆரோக்கியத்துடன் இருக்க அடுத்த குழந்தைக்கு குறைந்தபட்சம் 2 வருட இடைவெளி இருக்க வேண்டும்.

இதன் அவசியத்தை உணர்ந்து ரூ.18 ஆயிரம் தொகையை முழுமையாக பெறுவதற்கு பிரசவித்த தாய்மார்கள் தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை சிகிச்சை முறை செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 97 தாய்மார்களுக்கு ரூ.114.70 கோடி மதிப்பில் மகப்பேறு திட்ட நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறு நிதிஉதவி தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்