போலீஸ்காரரை தாக்கி வாக்கி டாக்கியை பறித்த ரவுடி கைது

திண்டுக்கல்லில் ரோந்து சென்றபோது போலீஸ்காரரை தாக்கி செல்போன், வாக்கி டாக்கியை பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீஸ்காரருடன் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-21 21:30 GMT
திண்டுக்கல், 


திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் பாண்டி (வயது 29). இவர் நேற்று காலை பாரதிபுரம் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் ரோந்து சென்றார். அங்குள்ள கருப்பணசாமி கோவில் பகுதியில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். கோவில் அருகே கருவேலமர காடு உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் பாண்டி, அந்த 2 பேரையும் அழைத்து விசாரித்தார்.

ஆனால், 2 பேரும் முறையாக பதில் கூறாமல், போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர் போலீஸ்காரரின் செல்போனை பறித்தார். அதை போலீஸ்காரர் பிடுங்க முயன்றபோது, 2 பேரும் சேர்ந்து அவரை தள்ளிவிட்டனர். உடனே போலீஸ்காரர் பாண்டி, வாக்கி டாக்கியில் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அவரிடம் இருந்த வாக்கி டாக்கியை 2 பேரும் பறித்தனர்.

இதையடுத்து செல்போன், வாக்கி டாக்கியை அவர்களிடம் இருந்து போலீஸ்காரர் பிடுங்க முயன்றார். அப்போது அவரை, 2 பேரும் சேர்ந்து தாக்கினர். இதனால் 3 பேரும் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். போலீஸ் ஜீப் வருவதை அறிந்ததும் 2 பேரும் தப்பியோட முயன்றனர்.

அதில் ஒருவரை, போலீஸ்காரர் பாண்டி மடக்கிப் பிடித்தார். மற்றொருவர் தப்பியோடி விட்டார். இதற்கிடையே பிடிபட்ட நபர் அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராகவன் (32) என்பதும், தப்பியோடியவர் ரெங்கநாதன் (34) என்பதும் தெரியவந்தது. ராகவன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து ராகவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ரெங்கநாதனை தேடி வருகின்றனர். ரோந்து சென்ற போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்