கூடலூர் ஊசிமலை காட்சி முனையில் நுழைவு கட்டணம் உயர்வு

கூடலூர் ஊசிமலை காட்சிமுனை பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2018-09-21 22:30 GMT

கூடலூர்,

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை காட்சிமுனை உள்ளது. நடுவட்டம் வனச்சரகத்துக்கு உட்பட்ட காட்சிமுனையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசித்து வந்தனர். ஆனால் இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் காட்சி முனைப்பகுதியில் முகாமிட்டு பல்வேறு செயல்களை அரங்கேற்றினர். இதனால் பெண்கள், குழந்தைகள் சுதந்திரமாக செல்ல முடியாத நிலை காணப்பட்டது. மேலும் சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை வனத்துக்குள் உடைத்து சென்றனர்.

இதனால் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஊசிமலை காட்சிமுனையில் சூழல் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 27–வது மைல் பகுதியை சேர்ந்த கிராம மக்களிடம் ஊசிமலையை பராமரிக்கும் பொறுப்பை வனத்துறையினர் ஒப்படைத்தனர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஊசிமலை காட்சிமுனையை கண்டு களிக்க நுழைவு கட்டணமாக வனத்துறையினர் ரூ.5 நிர்ணயம் செய்து வசூலித்து வந்தனர்.

இதன் மூலம் சமூக விரோதிகள் அங்கு வருவது கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளும் எவ்வித அச்சமும் இன்றி காட்சிமுனையில் நின்று கூடலூர் நகரம் மற்றும் இயற்கை காட்சிப்பகுதியை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் காட்சிமுனைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். இதனால் தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என வனத்துறைக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊசிமலை காட்சி முனைப்பகுதியில் தண்ணீருடன் கூடிய கழிப்பறை வசதி செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், கூடலூர் பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பராமரிப்பு செலவினங்கள் அதிகரித்துள்ளதால் காட்சி முனைப்பகுதிக்கு செல்லும் நுழைவு கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து நடுவட்டம் வனச்சரகர் ராமலிங்கம் கூறியதாவது:–

ஊசிமலை காட்சிமுனைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தண்ணீருடன் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு செலவினங்கள் அதிகரித்துள்ளதால் பயணி ஒருவருக்கு ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது. இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்