தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடல் கொந்தளிப்பால் சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைப்பு

கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2018-09-22 22:30 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில நாட்களாகவே பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன், கடல் கொந்தளிப்பாகவே இருந்து வருகின்றது. இதற்கிடையில் இதுவரை இல்லாத அளவிற்கு தனுஷ்கோடி பகுதியில் கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன் அரிச்சல்முனை கடற்கரையில் மணல் பரப்பாக இருந்த இடங்கள் கடல் நீர் சூழ்ந்த நிலையில் காட்சியளித்து வருகின்றன. மேலும் கடல் கொந்தளிப்பால் அரிச்சல்முனை கடற்கரையில் தடுப்புச்சுவரின் கற்கள் சரிந்து தடுப்பு சுவரும் சேதமடைந்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் இறங்கி செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளின் அடியிலும், கடல் அலைகளின் வேகத்தால் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன், கடல் கொந்தளிப்பாகவே இருப்பதால் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுற்றுலா பயணிகள் செல்ல 2–வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடல் கொநதளிப்பால் சேதமடைந்த தடுப்புச்சுவர் பகுதியில் நேற்று லாரி மூலம் கற்கள் கொண்டு வரப்பட்டு கடற்கரையில் கொட்டப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் கற்கள் அடுக்கப்பட்டு தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகளோ, வாகனங்களோ செல்லாமல் இருப்பதற்காக கடலோர போலீசாரும் கம்பிப்பாடு கடற்கரையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்