ஜப்பான்நாட்டு உதவியுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.11 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அமைச்சர் தகவல்

ஜப்பான் நாட்டு உதவியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ரூ.11¾ கோடியில் மருத்துவ உபகரணங்கள் கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-09-22 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகள் வார்டு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டார். அப்போது அந்தந்த வார்டுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு மருத்துவ கல்லூரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு ஒரு பெண் அழைத்து வந்திருந்த 3 வயது வாய்பேச முடியாத, காது கேளாத சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடமும், குழந்தையின் தாயாரிடமும் கேட்டறிந்தார்.

அப்போது அவர், இந்த மாதிரி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். அந்த திட்டத்தின்கீழ் சிகிச்சைக்காக ரூ.8 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அந்த சிகிச்சையை பெற்று பயனடையுமாறு குழந்தையின் தாயாரிடம் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி டீன் பாலசுப்பிரமணியன், ஆஸ்பத்திரி சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆஸ்பத்திரி சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவ கல்லூரிக்கு தேவையான சிகிச்சை பிரிவுகள், மருத்துவ உபகரணங்கள், கட்டிட வசதிகள் ஆகியவற்றை எடுத்து கூறி அவற்றுக்கு நிதி ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில், நாகர்கோவில், ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இங்கு கூடுதலாக 50 இடங்களை அதிகரித்து மாணவர் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூ.11 கோடியே 82 லட்சத்துக்கு புதிய மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ கல்லூரி ‘தாய்’ திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட உள்ளது. மாரடைப்பு சிகிச்சைக்காக ரூ.3½ கோடி செலவில் ‘கேத்லேப்’ வசதி வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ரூ.17 கோடியே 23 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு காலத்தில் இறப்பு விகிதம் இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிக குறைவாக உள்ளது. அதிலும் குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் மிக சிறப்பாக பணிபுரிந்து கடந்த 6 மாதத்தில் ஒரு மகப்பேறுகால இறப்பு இல்லாமல் செயல்பட்டுள்ளனர். இதை பாராட்டுகிறேன்.

கேரளாவில் அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றக்கூடாது என்ற நடைமுறை இருக்கலாம். அந்த நடைமுறை தமிழகத்தில் சாத்தியமில்லை என கருதுகிறேன். பொதுவாக மத்திய அரசு டாக்டர்கள், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்ற கூடாது என்ற நிலை உள்ளது.

தமிழக அரசு டாக்டர்கள் மிக சிறப்பான சேவையை அரசு மருத்துவமனையில் கொடுக்கிறார்கள். இதனால்தான் தமிழகம் இந்திய அளவில் முதன்மை மாநிலமாக, முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழக டாக்டர்களுக்கு அனைத்து விதமான சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்