மணப்பாறையில் குடிபோதையில் காருக்கு தீ வைத்த வாலிபர் கைது

மணப்பாறையில் குடிபோதையில் காருக்கு தீ வைத்த வாலிபரை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் பிடித்து கைது செய்தனர்.

Update: 2018-09-22 22:45 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை அழகர்சாமி தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 59). இவர் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி, கவர் போட்டு மூடியிருந்தார். இந்நிலையில் ஜெயக்குமாரின் கார் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஜெயக்குமாரின் வீட்டு கதவை தட்டி அவரை எழுப்பி தகவல் தெரிவித்தனர்.

கார் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் வீட்டின் முன்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சியை போலீசார் பார்த்த போது, வாலிபர் ஒருவர் வந்து காரின் முன்பக்கத்தில் அமர்ந்து தீ வைத்து விட்டுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மணப்பாறை நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் அதே வாலிபர் உள்ளாரா? என்பதை பார்த்த போது, கடைவீதியில் அவர் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், காருக்கு தீ வைத்த நபர் தோப்புப்பட்டியை சேர்ந்த ஜார்ஜ்(38) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, காருக்கு தீ வைத்ததை அவர் ஒத்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அனுஷா மனோகரி வழக்கு பதிவு செய்து ஜார்ஜை கைது செய்தார்.

இதேபோல் மணப்பாறையில் உள்ள பூங்கா சாலையில் உள்ள சைக்கிள் பழுது நீக்கும் கடை, அழகர்சாமி தெருவில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு கடை, அதே பகுதியில் உள்ள நாடக கொட்டை ஆகியவற்றுக்கும் தீ வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக புகார் எதுவும் செய்யப்படவில்லை. எனினும் அவற்றுக்கு தீ வைத்தது ஜார்ஜ்தானா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்