பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்

பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வழியில்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2018-09-22 22:45 GMT

பந்தலூர்,

பந்தலூர் அருகே தொண்டியாளம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 60). இவர் நேற்று காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த காட்டு யானை காளிமுத்துவை தாக்கியது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காட்டுயானையை விரட்டினர்.

பின்னர் காயமடைந்த காளிமுத்து மீட்கப்பட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சரவணன், வனக்காப்பாளர் லூயிஸ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இதனிடையே தொண்டியாளம் அம்புரோஸ் பகுதிக்கு ஆம்புலன்ஸ் உள்பட எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாத படி தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் தடைகள் ஏற்படுத்தி இருந்தது. இதனால் காயமடைந்த முதியவரை பொதுமக்கள் தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு சிறிது தூரம் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனவே தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் வாகனங்கள் வந்து செல்ல அனுமதிக்கக்கோரி நேற்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதன்பின்னர் பந்தலூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்பொது பொதுமக்கள் கூறியதாவது:–

எங்களது பகுதிக்கு செல்லும் சாலை தனியார் நிர்வாகத்துக்கு சொந்தமானது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி நிர்வாகத்தினர் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் யானை தாக்கி காயம் அடைந்த முதியவரை தொட்டில் கட்டி தூக்கி சென்றோம். இதேபோல் கர்ப்பிணிகள், நோயாளிகளையும் தொட்டில் கட்டி தூக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே வாகனங்கள் சென்று வர அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது தனியார் தோட்ட நிர்வாகத்தினர் தற்போது ஆட்டோ செல்ல அனுமதிக்கப்படும். பின்னர் உரிய அனுமதி பெற்று இந்த சாலை சீரமைக்கப்படும் என்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேலு, வனச்சரகர்கள் சரவணன், மனோகரன், கனேசன், துணை தாசில்தார் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் காமு. கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், தேயிலை தோட்ட நிர்வாகத்தினர், ஊர்பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்