திருவள்ளூர், மணல் கடத்தல்; 9 பேர் கைது

திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-22 21:59 GMT
திருவள்ளூர்,

மணல் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த சத்தரையை சேர்ந்த ஜான்சன் (வயது 20), உடன் வந்த வெங்கடேசன் (35), ஆறுமுகம்(40), திருப்பாச்சூரை சேர்ந்த ராஜவேல் (40) ஆகியோரை கைது செய்தனர்.

அதேபோல திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ஈக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த எறையூரை சேர்ந்த டிரைவரான கார்த்திக் (24), உடன் வந்த ஜெயகண்ணன் (30) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்துவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு தகவல் வந்தது. இதையடுத்து மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையிலான சூனாம்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சூனாம்பேட்டை அடுத்த இல்லீடு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக வந்த சொகுசு காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். இதில் அந்த காரில் ஓங்கூர் பாலத்தில் இருந்து ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் ஓங்கூரை அடுத்த தானாங்குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் (23), என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் மணலுடன் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய சொகுசு கார் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உத்திரமேரூரை அடுத்த அரசாணிமங்கலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு டிராக்டரை மடக்கி பிடித்த போலீசார், அதை ஓட்டி வந்த குவளை கிராமம் தொட்டி தெருவை சேர்ந்த விஜய் (28), உடன் இருந்த அதே தெருவை சேர்ந்த தினேஷ் (26) என்பவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்