டேங்கர் லாரி டிரைவரை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு

விழுப்புரம் அருகே டேங்கர் லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-09-30 22:00 GMT
விழுப்புரம், 

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 35). டேங்கர் லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி திருவண்டார்கோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் இருந்து டேங்கர் லாரியில் திருச்சிக்கு புறப்பட்டார். நள்ளிரவு 1.30 மணியளவில் விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் சென்றபோது, தூக்கம் வந்ததால் தான் ஓட்டிச் சென்ற டேங்கர் லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு பழனிவேல் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென டேங்கர் லாரியில் ஏறி, தூங்கிக்கொண்டிருந்த பழனிவேலை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் அவரது செல்போனை பறித்துக்கொண்டு, அதே மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் பழனிவேல் பலத்த காயமடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் மற்றும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேங்கர் லாரியில் தூங்கி கொண்டிருந்த டிரைவரை தாக்கி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்