சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார ரெயில் சேவைகளை குறைப்பதா? பயணிகள் ஆதங்கம்

சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார ரெயில் சேவைகளை குறைப்பதா? என்று பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Update: 2018-09-30 22:30 GMT
சென்னை,

சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர், சென்னை-அரக்கோணம் இடையே மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

இதையடுத்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 9 சேவைகள், சென்னை-ஆவடி 2 சேவைகள், சென்னை-அரக்கோணம் 2 சேவைகள், கடற்கரை-வேளச்சேரி 8 சேவைகள், சென்னை-திருவள்ளூர்-கும்மிடிப்பூண்டி 9 சேவைகள் என மொத்தம் 30 சிறப்பு மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு மின்சார ரெயில் சேவைகளை அக்டோபர் 1-ந் தேதி(இன்று) முதல் ரத்து செய்வதாக ரெயில்வே நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது.

அதோடுமட்டுமல்லாமல், சென்னை-திருவள்ளூர்-கும்மிடிப்பூண்டி, சென்னை-அரக்கோணம் இடையே இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரெயில் சேவைகளை மாற்றி அமைத்தும் இருக்கின்றனர். பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாததால் இந்த சிறப்பு மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் நேரத்தில் ஓரளவு சமாளிக்கும் வகையில் இருந்த சிறப்பு மின்சார ரெயில்களை ரத்து செய்யக் கூடாது என்று பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்படியாக மின்சார ரெயில் சேவைகள் குறைப்பதனால், ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்றும், படிக்கட்டுகளில் தொங்கி செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பயணிகள் தங்களுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், ‘பரங்கிமலை ரெயில் விபத்துக்கு பிறகு விரைவு மின்சார ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதன் காரணமாக சாதாரண மின்சார ரெயில் சேவைகளில் பயணிகள் கூட்டம் முட்டி மோதுகிறது. இந்த சூழ்நிலையில் சிறப்பு மின்சார ரெயில் சேவைகளை நிறுத்துவது சரியல்ல. ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் மீது கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். விரைவு மின்சார ரெயில் சேவைகள் எப்போது இயக்கப்படும்? என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். அதுவரை சிறப்பு மின்சார ரெயில் சேவைகளை ரத்து செய்யக்கூடாது’ என்றனர்.

மேலும் செய்திகள்