கார் பணிமனையில் மின்சாரம் தாக்கி உரிமையாளர் உள்பட 2 பேர் பலி

புதிதாக திறக்க இருந்த கார் பணிமனையில் மின்சாரம் தாக்கி உரிமையாளர் உள்பட 2 பேர் உயிர் இழந்தனர்.

Update: 2018-10-01 23:30 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லி, ஜேம்ஸ் தெருவை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 25). இவருடைய நண்பர் மடிப்பாக்கம், ராம் நகரை சேர்ந்த கிளட்சன்தாஸ் (25).

கல்லூரி நண்பர்களான இவர்கள் இருவரும் இணைந்து போரூர், முகலிவாக்கம், மவுன்ட் பூந்தமல்லி சாலையில் கார்களை சுத்தம் செய்வது (வாட்டர் வாஷ்) மற்றும் கார்களை புதிய வடிவில் வடிவமைப்பதற்கான கார் பணிமனையை திறக்க முடிவு செய்தனர்.

இருவரும் இதற்காக பணிகளில் சில மாதங்களாக ஈடுபட்டு வந்தனர். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நேற்று காலை கார் பணிமனையை திறப்பதற்கு அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிமனையில் மின் விசிறிகளை பொருத்தும் பணி நடந்தது. எலெக்ட்ரீசியன் அமுல்ராஜ் (45), என்பவர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தார்.

கோகுலகிருஷ்ணன் மற்றும் கிளட்சன்தாஸ் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தனர். மின் இணைப்பை துண்டித்து விட்டு அமுல்ராஜ் பணியை செய்துகொண்டிருந்தார்.

ஒரு மின்விசிறிக்கான இணைப்பு கொடுக்கப்பட்டதும் அமுல்ராஜ் சற்று ஓய்வு எடுக்க நினைத்தார். பின்னர் அவர் மின் இணைப்பை ‘ஆன்’ செய்து தனது செல்போனுக்கு ‘சார்ஜ்’ போட்டார்.

சற்று நேரத்துக்கு பின்னர் மின்சாரம் இணைப்பில் இருப்பதை மறந்துவிட்டு அமுல்ராஜ் பணியை தொடர்ந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு அவரை காப்பாற்றுவதற்காக கோகுலகிருஷ்ணன் மற்றும் கிளட்சன்தாஸ் ஓடி சென்றனர். அப்போது தரை முழுவதும் ஈரப்பதமாக இருந்ததால் அவர்கள் இருவரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.

இந்த கோர சம்பவத்தில் அமுல்ராஜ், கிளட்சன்தாஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கோகுலகிருஷ்ணன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அமுல்ராஜ் மற்றும் கிளட்சன்தாசின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோகுலகிருஷ்ணன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று கம்பெனி திறக்க இருந்த நிலையில் உரிமையாளர் மற்றும் எலெக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்