டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் 2-வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் 2-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-04 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டிப்பது. டீசல் விலையேற்றத்தால் மீன்பிடி தொழில் முற்றிலும் நஷ்டமாகி வருகிறது. அதனால் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். விசைப் படகு ஒன்றிற்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் முதல் நாகை மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.

வேலைநிறுத்த போராட்டத்தால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் துறைமுக கரைகளில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று 2-வதுநாளாக நாகை மீனவர்கள் தங்களது விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்று துறைமுக கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதேகோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(வெள்ளிக்கிழமை) நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதேபோல வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் ஆகிய கிராம மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரையில் நிறுத்திவிட்டு வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்