அரூரில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட 3 பேர் அவினாசி கோர்ட்டில் சரண்

அரூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்ட 3 பேர் அவினாசி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2018-10-05 22:30 GMT
அவினாசி,

அரூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்ட 3 பேர் திருப்பூர் மாவட்டம் அவினாசி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் மேல்பாக்‌ஷா பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுரேசுக்கும் அரூரை சேர்ந்த யோகாநந்தம் (34) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்துள்ளது. யோகாநந்தமிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை சுரேஷ் கடனாக வாங்கியிருந்தார். ஆனால் அதை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2-ந் தேதி யோகாநந்தம் மேலும் 2 பேருடன் சென்று சுரேசை சந்தித்து கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த யோகாநந்தம் மற்றும் 2 பேரும் சேர்ந்து சுரேஷின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் சுரேஷின் பிணத்தை புறாக்கல்உட்டை என்ற இடத்தில் வீசிவிட்டு 3 பேரும் தலைமறைவாவிட்டனர்.

இது தொடர்பாக அரூர் போலீசில் அருள்மொழி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்ததும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட யோகாநந்தம் மற்றும் அரூரை சேர்ந்த ஆரோக்கியசாமி (34), கார்த்தி (20) ஆகிய 3 பேரும் நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு ஸ்ரீவித்யா உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்