ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் வைகோ பேட்டி

அதிர்ச்சி தரக்கூடிய வகையில் பேசிய கவர்னரின் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று வைகோ கூறினார்.

Update: 2018-10-07 23:00 GMT
செம்பட்டு,

பருவமழையை காரணம் காட்டி தமிழக இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு முன் கடும் பனி, குளிர், மழைக்காலங்களில் கூட இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தப்பட்டு இருக்கிறது. 5 மாநில தேர்தலோடு தமிழக இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விடும் என ஊடகங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் எந்த அடிப்படையில் இப்படி ஒரு முடிவை எடுத்தது என்பதற்கான விளக்கத்தை அளிக்கவேண்டும்.

தோல்வி பயத்தினால் தான் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பை வெளியிட வைத்து அ.தி.மு.க. சூழ்ச்சி செய்து விட்டதாக கூறுவது சரி அல்ல. ரெட் அலர்ட் அறிவிப்பை வெளியிட்ட இந்திய வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எந்த பக்கம் நகர்கிறது என்பதன் அடிப்படையில் பலத்த மழை பெய்யும் என கூறி இருந்தது. பின்னர் அது வேறு பக்கமாக நகர்ந்து விட்டதால் விலக்கி கொள்வதாகவும் அறிவித்து விட்டார்கள். எனவே அதற்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க கூடிய அதிகாரங்கள் இருக்கின்றன.

தமிழக அரசியல் வரலாற்றிலேயே கவர்னர் ஒருவர் உயர் கல்வி துறையில் துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக அதிர்ச்சி தரக்கூடிய குற்றச்சாட்டை கூறி இருப்பது இதுவே முதல் முறையாகும். கவர்னர் பொத்தாம் பொதுவாக இப்படி கூறி இருக்க முடியாது. அவரிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவரது பொறுப்பு. துணைவேந்தர் நியமனத்திலே ஊழல் என்றால் உயர் கல்வி துறையில் பேராசிரியர், விரிவுரையாளர் என அனைத்து பணிகளிலும் அங்கே ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. கல்லூரிகள் பல கோடி கப்பம் கட்டி இருக்க வேண்டும். எனவே இதுகுறித்து தக்க விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் பதவி விலக வேண்டும். இல்லை என்றால் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்