குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருந்தால் கடும் நடவடிக்கை - ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Update: 2018-10-07 23:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் ஓடும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களின் டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை காவல்துறை சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகளைவழங்கி பேசினர். அப்போது போலீசார் கூறுகையில், ஆட்டோ, ஷேர் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் அவரவர் பெயருடன் கூடிய ‘பேட்ஜ்’ அணிய வேண்டும், கட்டாயம் சீருடை அணிந்துதான் ஆட்டோக்களை இயக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்ல வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது. மேலும் ஆட்டோக்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவிகள், பெண்களை கிண்டல் செய்யக்கூடாது, அவர்களிடம் சகோதர உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆட்டோ நிறுத்தங்களில் ஆட்டோவினுள் பெண்களை தனியாக அமர வைக்கக்கூடாது. எந்தவித குற்ற சம்பவங்களுக்கும் ஆட்டோ டிரைவர்கள் காரணமாக இருத்தல் கூடாது. குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருந்தால் சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களது ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்