மும்பையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பொதுமக்கள் கடும் அவதி

மும்பையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2018-10-08 22:34 GMT
மும்பை,

மும்பையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே வெயில் வாட்டி வதைக்கும். இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக மும்பையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

சாதாரணமாக அக்டோபர் மாதத்தில் மும்பையில் 32 முதல் 33 டிகிரி வரை மட்டுமே வெப்பநிலை இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக மும்பையில் வெப்பநிலை 36 டிகிரிக்கு மேல் அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் 37.8 டிகிரி வெப்பநிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கடும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் குடை பிடித்தபடியும், முகத்தை துணியால் மூடியபடியும் சென்றனர். இரவு நேரத்தில் புழுக்கம் காரணமாக குடிசைப்பகுதியில் வாழும் மக்கள் தூங்க முடியாமல் அவதி அடைந்தனர். இதேபோல வெப்பநிலை அதிகரித்ததால் குளிர்பான, பழச்சாறு கடைகளிலும் மக்கள் கூட்டத்தை அதிகமாக காண முடிந்தது.

வெயிலின் தாக்கம் திடீரென அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் வயிற்றுக்கோளாறு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அதிக தண்ணீர் குடிக்குமாறும், கீரை உள்ளிட்ட சைவ உணவுகளை எடுத்து கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் கிழக்கு நோக்கி வீசும் காற்று தான் மும்பையில் திடீர் வெப்பநிலை உயர்வுக்கு காரணம் எனவும், சில நாட்களில் வெப்பநிலை குறைந்து இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை மைய விஞ்ஞானி அஜய் குமார் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்