தொட்டியம் அருகே காவிரி கரையோரம் கணவன்–மனைவி மர்ம சாவு காரணம் என்ன? போலீசார் விசாரணை

தொட்டியம் அருகே காவிரி கரையோரம் கணவன்–மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2018-10-15 04:30 IST
தொட்டியம்,

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீனிவாசநல்லூர் காவிரி ஆற்றின் கரையோரம் நேற்று மதியம் வயது முதிர்ந்த ஆண் மற்றும் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தொட்டியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மற்றும் தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

 அப்போது அங்கு முதியவர் உடல் காவிரி கரையோரத்திலும், பெண்ணின் உடல் சுமார் 5 அடி தூரத்தில் காவிரி ஆற்றிலும் மிதந்தது. பின்னர் 2 பேர் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த இருவரும் தொட்டியம் அருகே உள்ள ஏரிகுளம் கீழத்தெருவை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி தங்கராசு(வயது 62) மற்றும் அவரது மனைவி தங்கம்மாள்(60) என்பது தெரிய வந்தது. இந்த தம்பதிக்கு மகாலட்சுமி என்ற மகள் உள்ளார். அவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த ராசு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்ததும், அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளதும் தெரிய வந்தது.


 மேற்கொண்டு நடத்திய விசாரணையில் தங்கராசும், தங்கம்மாளும் நேற்று காலை காட்டுப்புத்தூர் அருகே உன்னியூரில் உள்ள தனது பேரனின் மாமனார் வீட்டிற்கு சென்று அங்கு காலை உணவை முடித்துவிட்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர்கள் சீனிவாசநல்லூர் காவிரி கரையோரம் பிணமாக கிடந்ததும் தெரிய வந்தது.

 வயது முதிர்வின் காரணமாக அவர்கள் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தம்பதியின் சாவு குறித்து தெரிய வரும் என போலீசார் கூறினர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்