ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-10-14 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் தேசிய மீனவர் தொழிலாளர் பேரவை சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய மீனவர் பேரவை துணைத்தலைவர் குமரவேல் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மீனவர்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் சாகர்மாலா திட்டமும், ஹைட்ரோ கார்பன் திட்டமும் நடை முறைபடுத்த கூடாது. இந்த திட்டமானது உள்நாட்டின் தொழில் வளங்களை பாதிக்கும். இந்த திட்டங்கள் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டமாகும்.

எனவே இந்த திட்டங்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது 5 வாயுக்களை உள்ளடக்கியது ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் மணல், நீர், காற்று, பாறை ஆகியவை முற்றிலும் அழிந்து விடும். இந்த திட்டத்தால் நிலஅதிர்வுகள் ஏற்பட்டு தண்ணீர், காற்று வெளியேறி மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு மாறி விடும். எனவே, இதை வலியுறுத்தி மற்ற இயக்கங்களோடு இணைந்து அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி ராமநாதபுரத்தில் மாநாடு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேசிய மீனவர் பேரவையை சேர்ந்த ரவி, கணேசன், சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்