குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

அனைவரும் தங்களது குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.

Update: 2018-10-15 22:30 GMT

சிவகங்கை,

மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழிக் கருத்தரங்க நிறைவு விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயராகவன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பசும்பொன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:–

இன்றைய கல்வியாளர்களிடையே மட்டுமின்றி, கிராமப்புறத்தில் வாழும் ஏழை, எளியோர் மத்தியிலும் ஆங்கில மோகம் கலந்திருப்பது வேதனையளிக்கும் செய்தியாகும்.

தமிழ் மொழியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. இன்றைய தமிழ் சமுதாயம் மேலை நாட்டு மொழிகளை மட்டுமின்றி, அவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை பின்பற்றத் தொடங்கியதன் விளைவாக தமிழர் பண்பாடு, நாகரீகம் சீரழிந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் மொழியை இனி வரும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், அதனுடைய வளர்ச்சியை கருதியும் அனைவரும் தங்களது குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்