போலீசில் புகார் அளித்த பெண்ணின் வீட்டின் முன்பு தகராறு செய்த வாலிபர் அடித்து கொலை

போலீசில் புகார் அளித்த பெண்ணின் வீட்டின் முன்பு நின்று தகராறு செய்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-10-15 22:15 GMT
புனே,

புனே, வனோவ்ரே பகுதியை சேர்ந்தவர் அக்சய்(வயது20). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளன. சம்பவத்தன்று அக்சய் ராஜீவ்காந்தி காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக தெரிகிறது. இதை அந்த பகுதியில் உள்ள பெண் கண்டித்தார். அப்போது, அக்சய் அந்த பெண்ணை அவதூறாக பேசியுள்ளார்.

இது குறித்து பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சம்பவத்தன்று பெண்ணின் வீட்டின் முன்பு வந்து அவதூறாக பேசி உள்ளார். மேலும் அந்த பெண்ணின் வீட்டின் மீது கல்லை எறிந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் அக்சயை உருட்டுகட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அக்சயை அங்கு வந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அக்சயை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முகமதுவாடி போலீஸ் சவுக்கி முன் அவரது உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்