இதய கோளாறால் அவதிப்படும் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டப்படுமா? கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு

இதய கோளாறால் அவதிப்படும் 6-ம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்கு மாவட்ட நிர்வாகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்தனர்.

Update: 2018-10-15 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக பெற்றார். மொத்தம் 258 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

க.பரமத்தி அருகே நொச்சிக்காட்டுவலசு காலனியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படாததால் பக்கத்து ஊர்களுக்கு அலைந்து திரிந்து குடிநீர் பிடித்து வருகிறோம். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக பணம் செலுத்தியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தனியாக வீட்டிற்கு குடிநீர் இணைப்பு விரைவில் வழங்க வேண்டும். மேலும் எங்கள் ஊருக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் நத்தமேடு குந்தாணிப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக எங்கள் பகுதியில் குடியிருந்து வருகிறோம். ஆனால் சொந்தமாக வீடோ, நிலமோ இல்லாததால் நாங்கள் உழைப்பது எல்லாம் வீட்டு வாடகைக்கே செலவாகிவிடுகிறது. எனவே எங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

புகளூர் பாசன விவசாயிகள் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் திரண்டு வந்து கொடுத்த மனுவில், புகளூர் வாய்க்காலில் மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் வரும் போது, காகித ஆலையின் கழிவுநீரும் அதனுடன் சேர்ந்து வருகிறது. வாங்கல், நெரூர் வாய்க்கால் வழியாக இந்த நீர் பாசனத்திற்கு செல்வதால் பயிர் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கழிவுநீரை மாற்று முறையில் வெளியேற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுகா குறிக்காரன்பட்டி காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள ஆரம்ப பள்ளியில் 70 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி சாலையோரத்தில் உள்ளதால் வாகனங்களின் இரைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் படிப்பில் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே அந்த பள்ளி மற்றும் அதன் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் அருகே புலியூர் கொல்லாபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கந்தசாமி தனது மனைவியுடன் வந்து கொடுத்த மனுவில், எங்களது மகள் ஜனனி(வயது 11) எங்கள் ஊரிலுள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அவளுக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்பத்திரியில் சென்று டாக்டரிடம் காண்பித்த போது, இதயம் வழக்கத்தை விட சற்று இடம்மாறி இருந்தது தெரிய வந்தது. இதனை சரிசெய்வதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனில் லட்சக்கணக்கில் செலவாகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். எனது குடும்பமோ மிகுந்த ஏழ்மையில் இருப்பதால், எனது மகளின் மருத்துவ உதவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

கரூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த மனுவில், தாந்தோன்றிமலை கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் வழங்கப்படும் செட்ஆப் பாக்ஸ்களின் மூலம் அதிகளவில் சேனல் தெரிவதில்லை. இதுகுறித்து விசாரித்தபோது நாங்கள் செலுத்திய கட்டணத்தை விட, குறைந்த கட்டணத்தில் செட்ஆப் பாக்ஸ் பிளானை பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாவட்ட அதி திராவிடர் நல அதிகாரி லீலாவதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்