வாலாஜாபாத் அருகே எரிசாராயம் கடத்திய தம்பதி கைது

வாலாஜாபாத் அருகே எரிசாராயம் கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 19 கேன் எரிசாராயம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-10-16 23:00 GMT

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பஸ் நிலையம் பகுதியில் எரிசாராயம் கடத்துவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 5 கேன்களில் எரிசாராயம் கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். காரில் வந்த இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் வாலாஜாபாத்தை அடுத்த வெங்குடி கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 47), அவரது மனைவி கலையரசி (40) என்பதும், 2 பேரும் சாராய விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் பலமுறை சாராயம் விற்பனை செய்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து கணவன், மனைவி இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் போலீசார் அவர்களது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில், வீட்டின் அருகே பாலாற்று பகுதியில் மணலில் புதைத்து வைத்து இருந்த 14 கேன் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 19 கேன்களில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 950 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களுக்கு சாராய விற்பனையில் உதவியாக இருந்த அவர்களது மகன் மணிகண்டன் (20) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்