கொளத்தூரில் லாரி மோதி 1½ வயது குழந்தை சாவு; டிரைவர் கைது

கொளத்தூரில் டேங்கர் லாரி மோதி 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2018-10-17 04:30 IST
செங்குன்றம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி போத்துவாய் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 27). இவரது மனைவி திருவண்ணாமலை மாவட்டம் தெய்வநத்தம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (24). இவர்களது மகன் மோகித் (1½). லட்சுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் ஜெகநாதன் நகரில் இவர்கள் குடியேறினர். கலைவாணன் தள்ளு வண்டியில் வறுகடலை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் குழந்தை மோகித்திற்கு தாய் லட்சுமி உணவு ஊட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி, தாயிடம் இருந்து விலகி ஓடிய மோகித் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை மோகித் பரிதாபமாக உயிரிழந்தான்.

பின்னர் லாரி நிற்காமல் சென்றுகொண்டிருந்தது. உடனே லட்சுமி குழந்தை மோகித்தின் உடலை தூக்கிக்கொண்டு லாரியை பிடித்தவாறு அழுதுகொண்டே ஓடினார். லட்சுமியின் சத்தம் கேட்ட பொதுமக்கள் ஓடி வந்து, அந்த லாரியை மடக்கி பிடித்து டிரைவரை அடித்து உதைத்தனர்.

டேங்கர் லாரி ஓட்டி வந்தவர் உத்திரமேரூரை சேர்ந்த மணிகண்டன் (27) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. உடனே பொதுமக்கள் அவரை பிடித்து வில்லிவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுகிலா வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்