மீன்சுருட்டி அருகே குழந்தையை குடிபோதையில் கொன்ற தந்தை கைது

மீன்சுருட்டி அருகே குழந்தையை குடிபோதையில் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-16 23:00 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்துள்ள காடுவெட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு ஜெயசுதா (வயது 2) மற்றும் ஜெயதீஷா என்ற 6 மாத பெண் குழந்தை ஆகிய 2 குழந்தைகள். மணிகண்டன் தினமும் மது குடித்து விட்டு, மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல் கடந்த 9-ந்தேதி மணிகண்டன் கூலிவேலைக்கு சென்று விட்டு, பின்னர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அனுராதாவிடம் வழக்கம் போல் தகராறு செய்துள்ளார்.

இதில் 6 மாத குழந்தை ஜெயதீஷா திடீரென உயிரிழந்தது. இதையடுத்து மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து, யாருக்கும் தெரியாமல் குழந்தையின் உடலை வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டனர். இதனால் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மணிகண்டன் கடந்த 11-ந்தேதி விஷம் குடித்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே 6 மாத குழந்தை இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் லஷ்மிதரன், இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மீன்சுருட்டி போலீசார்வழக்குப்பதிவு செய்து, ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா முன்னிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை ஜெயதீஷா கழுத்தை நெரித்ததில் தான் இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டனிடம், மீன்சுருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், மனைவி அனுராதாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து, குடிபோதையில் மனைவி அனுராதா, மகள் ஜெயதீஷா ஆகியோரின் கழுத்தை நெறித்தேன். இதில் ஜெயதீஷா கழுத்தை நெரித்ததில் அவள் இறந்துவிட்டாள் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். குடிபோதையில் குழந்தையை, தந்தையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்