உடுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி - மற்றொருவர் படுகாயம்

உடுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-10-16 22:00 GMT
உடுமலை, 


திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் குமாரசாமி லே அவுட்டை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் பார்த்தீபன் (வயது 24). கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர்கள் எஸ்.வி.புரம் ரங்கநாதர் லே-அவுட்டை சேர்ந்த சண்முகராஜ் என்பவரது மகன் ராஜ்கவின் (24), அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரது மகன் அருண் (24). இவர்கள் 2 பேரும் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டியில் இருந்து எஸ்.வி. புரம் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பார்த்தீபன் ஓட்டினார். பின் இருக்கையில் மற்ற 2 பேரும் அமர்ந்து இருந்தனர். இவர்கள் உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பம்பட்டி பெரியகோட்டை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே கோவையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் அரசு விரைவு பஸ், வந்து கொண்டிருந்தது. இந்த பஸ், அதற்கு முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது, பார்த்தீபன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்குஅவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், பார்த்தீபன், ராஜ்கவின் ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பலத்த காயம் அடைந்த அருணுக்கு உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக உடுமலை துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் விசாரித்து அரசு விரைவு பஸ் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராமலிங்கம் (46) மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்