சிவசேனா எம்.எல்.ஏ. கொலை முயற்சி வழக்கில் 4 பேர் சிக்கினர்

சிவசேனா எம்.எல்.ஏ. வை கொல்ல முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மெட்ரோ ரெயில் திட்ட ஒப்பந்ததாரரின் சதி இருப்பது அம்பலமாகி உள்ளது.

Update: 2018-10-16 22:19 GMT
மும்பை,

மும்பை அணுசக்தி நகர் தொகுதியை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. துக்காராம் காட்டே. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் நவராத்திரி மண்டலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த போது மர்மகும்பலால் தாக்கப்பட்டார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்தவர்களை வலைவீசி ேதடி வந்தனர். இந்த நிலையில், 4 பேர் போலீசில் சிக்கினர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்களது பெயர் சச்சின் கன்டகலே (வயது31), மங்கஷே் சாவந்த் (26), விஷால் கன்டாரே (24), சூரஜ் (25) என்பது தெரியவந்தது. இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்தது அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் வழித்தடம் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர் மகேஷ் லோந்தே என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மகேஷ் லோந்தே மேற்கொண்டுள்ள பணியில் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி சிவசேனா எம்.பி. ராகுல் ெசவாலேயுடன் சேர்ந்து துக்காராம் காட்டே எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தியுள்ளார்.

அப்போது, சிவசேனா தொண்டர்கள் மகேஷ் லோந்தே செய்து வரும் பணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். இது அவருக்கு ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.

இதன் காரணமாக அவர் இந்த தாக்குதலை தூண்டி விட்டு இருந்தது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் மகேஷ் லோந்தேவை கைது செய்யவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்