சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு: இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல் - 35 பேர் கைது

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-21 21:30 GMT
திண்டுக்கல், 

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 வயதுக்குட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கேரளாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதேபோல் தமிழகத்திலும் போராட்டம் நடக்கிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ரெகானா பாத்திமா மற்றும் ஆந்திராவை சேர்ந்த டி.வி. நிருபர் கவிதா கோஷி ஆகியோர் சபரிமலைக்கு சென்றனர். இதையடுத்து பக்தர்களின் போராட்டம் காரணமாக அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து பஸ் நிலையம் முன்பு அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சபரிமலைக்கு கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெகானா பாத்திமா, கவிதா கோஷி ஆகியோரை கைது செய்ய வேண்டும். சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் கேரள அரசை கலைக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ரவிபாலன், மண்டல தலைவர் தர்மா உள்பட 35 பேரை நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்