பணியின் போது இறந்த போலீசாருக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி; 48 குண்டுகள் முழங்க நடந்தது

பணியின் போது இறந்த போலீசாருக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில் 48 குண்டுகள் முழங்க நேற்று நடைபெற்றது.

Update: 2018-10-21 23:00 GMT

திருப்பூர்,

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 412 பேர் மற்றும் தமிழகத்தில் 2 பேர் என பணியின் போது இறந்த போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகள் 414 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21–ந் தேதி, வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை மாநகர போலீசார் சார்பில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் தலைமை தாங்கி பேசினார்.

இதன் பின்னர் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகளின் தியாகத்தை பறைசாற்றும் விதமாக 48 குண்டுகள் முழங்கப்பட்டது.

மேலும், மாநகர துணை கமி‌ஷனர் உமா, போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி மற்றும் போலீசார் பலர் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான போலீசார் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்