செண்பகத்தோப்பு அணையை சீரமைக்காவிட்டால் போராட்டம் சினிமா டைரக்டர் கவுதமன் பேட்டி

செண்பகத்தோப்பு அணையை உடனடியாக சீரமைக்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று சினிமா டைரக்டர் கவுதமன் கூறினார்.

Update: 2018-10-21 23:00 GMT
கண்ணமங்கலம் அருகே படவேடு பகுதியில் நேற்று நடந்த பா.ம.க. பிரமுகர் திருமணத்திற்கு வருகை தந்த சினிமா டைரக்டர் கவுதமன், படவேடு செண்பகத்தோப்பு பகுதியில் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள அணையை நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட செண்பகத்தோப்பு அணை இன்னும் விவசாய பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை சீரமைத்தால் இந்த பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயம் செழிக்கும்.

இந்த அணையை சீரமைக்காமல் உள்ளதால் இந்த பகுதியில் உள்ள கூலி தொழிலாளிகள் ஆந்திரா, கேரளாவிற்கு கூலி வேலைக்கு செல்லும் நிலைமையில் உள்ளனர். பலர் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட செல்கின்றனர். ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் செம்மரம் வெட்டுவதாக ஆந்திரா வனத்துறை போலீசாரால் சுடப்பட்டு இறந்துள்ளனர்.

இந்த அணையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்க வாய்ப்பில்லை. தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு. செண்பகத் தோப்பு அணையை சீரமைக்க தற்போது ஒதுக்கியுள்ள ரூ.34 கோடியை பயன்படுத்தி உடனடியாக சரி செய்யவேண்டும்.

செண்பகத்தோப்பு அணையை சீரமைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் சுமார் 1 லட்சம் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அணையை சீரமைக்க தமிழக முதல்-அமைச்சர் ரூ.34 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தொகுதி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கூறி பல மாதங்களாகியும் இன்னும் பணி தொடங்கவில்லை என இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

தற்போது சினிமா டைரக்டர் கவுதமனின் போராட்டம் குறித்த அறிவிப்பு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்