புதுச்சேரியில் விடிய விடிய மழை

புதுச்சேரியில் விடிய விடி இடி மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் ஒரு வீட்டில் மின் சாதனங்கள் சேதமடைந்தன.

Update: 2018-10-21 22:30 GMT

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்றும் மழை கொட்டியது.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மழை பெய்தது. சிறிதுநேரமே நீடித்த நிலையில் நின்று போனது. பின்னர் மீண்டும் மழை கொட்டியது. தொடர்ந்து இரவு முழுவதும் லேசாகவும், பலமாகவும் மழை பெய்து கொண்டே இருந்தது. காலையிலும் இதேபோன்ற நிலை நீடித்தது. காலை 9 மணிக்கு பிறகு பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது.

பகல் 11.45 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்த போது சாரம் கங்கையம்மன்கோவில் தெருவை சேர்ந்த சவுந்தர் என்பவரது வீட்டை மின்னல் தாக்கியது. இதில் அவரது வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புதுவை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பார்வையிட்டு தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மதியம் 2 மணி வரை லேசாக மழை பெய்தபடி இருந்தது. இதனால் பகல் முழுவதும் இதமான சூழல் நிலவியது. விடுமுறை நாள் என்பதால் புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவ்வப்போது பெய்த மழையில் நனைந்துகொண்டே கடற்கரை பகுதியில் அவர்கள் இதமான சூழலை அனுபவித்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சண்டே மார்க்கெட் பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் ஏராளமான அளவில் துணி வகைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மழை காரணமாக துணிகள் வாங்க மக்கள் வராததால் அவர்கள் கவலையடைந்தனர்.

மேலும் செய்திகள்