வானூர் அருகே பரிதாபம்: பன்றி காய்ச்சலுக்கு 9 மாத கர்ப்பிணி சாவு

வானூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு 9 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-10-21 23:15 GMT

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாபகேசவன் (வயது 35). புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் சுகன்யா மீண்டும் கர்ப்பமானார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை உறவினர்கள் புதுவை ராஜீவ்காந்தி மகளிர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுகன்யாவை மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சுகன்யாவை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சுகன்யா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி சுகன்யா உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசுவும் இறந்தது. தாயும், சிசுவும் இறந்ததை அறிந்து சுகன்யாவின் கணவர் பஞ்சாப கேசவன் குடும்பத்தினர் கதறி அழுதனர். பன்றி காய்ச்சலால் 9 மாத கர்ப்பிணி இறந்த சம்பவம் கீழ்கூத்தபாக்கம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்