அம்மா உணவக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது கடலூரில் பரபரப்பு

கடலூரில் நேற்று மழை பெய்த நிலையில், அம்மா உணவகத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-21 22:45 GMT
கடலூர் உழவர் சந்தை வளாகத்தில் நகராட்சி சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மிக குறைந்த விலையில் காலை சிற்றுண்டி, மதியம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உணவை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறைந்த விலை என்பதால் குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்பனையாகி விடும். இதனால் காலதாமதமாக வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிகிறது.

இந்நிலையில் இந்த அம்மா உணவக சுற்றுச்சுவர் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சுற்றுச்சுவரை ஒட்டி பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இதனால் சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் என்ற நிலையில் இருந்தது.

நேற்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்து வந்ததால், மதியம் 2 மணி அளவில் திடீரென அம்மா உணவக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இடது புறம் உள்ள சுற்றுச்சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்து விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக காலை, மாலை நேரங்களில் இந்த சுவரையொட்டி விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவரை ஒட்டி பள்ளம் தோண்டியதால் விவசாயிகள் அதன் அருகில் சாலையோரம் வாழைத்தார்களை வைத்து விற்பனை செய்தனர்.

அதிலும் மதியம் நேரம் என்பதால் அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. ஆனால் அம்மா உணவகத்துக்கு பொதுமக்கள் சென்று வந்தனர். சுவர் விழும் நேரத்தில் அந்த வழியாக யாரும் செல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

மேலும் செய்திகள்