சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நண்பருடன் வாய்க்காலில் தவறி விழுந்த வாலிபரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நேர்ந்த விபத்தில் நண்பருடன் வாய்க்காலில் தவறி விழுந்த வாலிபர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரை தீயணைப்பு வீரரகள் தேடி வருகின்றனர்.

Update: 2018-10-21 22:30 GMT
சிதம்பரம் சுலோச்சனா நகரை சேர்ந்தவர் கேசவன். இவர் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இனிப்பு கடை வைத்துள்ளார். இவருடைய மகன் மணி(வயது 20). இவர் கடையில் கேசவனுக்கு உதவியாக இருந்து வருகிறார். இவருடைய நண்பர் கீரப்பாளையம் மேலத்தெருவை சேர்ந்த குமரவேல் மகன் அஜித்குமார்(24) ஆவார். நேற்று, மணி, அஜித்குமார் ஆகியோர் சிதம்பரம் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நோக்கி வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை மணி ஓட்டினார்.

அம்மா பேட்டையில் கான்சாகிப் வாய்க்கால் பாலத்தில் உள்ள, வளைவு பகுதியில் திரும்பிய போது, மணியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் வாய்க்காலின் உள்ளே விழுந்தனர்.

தற்போது பெய்த மழையால் வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இருவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இந்த நிலையில் அஜித்குமாருக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர் நீந்தி கரைக்கு திரும்பினார்.

ஆனால் மணியை காணவில்லை. இதுபற்றி உடனடியாக சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அதிகாரி ராஜேந்திரசோழன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து வாய்க்காலுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலும் தேடுதல் வேட்டை நடந்த நிலையில் மணி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதனால் அவருக்கு என்ன நேர்ந்தது? என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த மணியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாய்க்கால் பாலத்தில் குவிந்தனர். இதுபற்றி அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் நேரில் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தி, நடந்த சம்பவம் பற்றி விசாரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் 6.45 மணி வரை தேடும் பணி நடந்த நிலையில், இருள் சூழ்ந்ததால் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தினர். தொடர்ந்து இன்றும் மணியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்