வேடசந்தூர் பகுதியில்: வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் - சிறப்பு முகாம் நடத்த வலியுறுத்தல்

வேடசந்தூர் பகுதியில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2018-10-21 22:15 GMT
வேடசந்தூர், 


வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அழகாபுரி, விராலிப்பட்டி, கல்வார்பட்டி, விருதலைப்பட்டி, பூத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பருவநிலை மாறியுள்ளதால் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெரும்பாலானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். காய்ச்சல் பாதித்த 35 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், அனிதா (வயது 12), மதன் (9), தீபா (5), ரவிபாரதி (2) உள்பட 10 பேர் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேடசந்தூர் அருகே உள்ள விராலிப்பட்டியில் கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த கிராமத்தில் மட்டும் இதுவரை 30 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அது அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பரவுகிறது.

வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தி ஆகி உள்ளன. இதனால் தான் காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவ துறையினர் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்