கமலுடன் காங்கிரஸ் இணைந்தால் கல்லறைக்கு செல்வதற்கு சமம் ஆரணியில் நாஞ்சில் சம்பத் பேட்டி

கமலுடன் காங்கிரஸ் இணைந்தால் கல்லறைக்கு செல்வதற்கு சமம் என்று ஆரணியில் நாஞ்சில் சம்பத் கூறினார்.

Update: 2018-10-22 22:45 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் உள்ளது. எனவே, அவர் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பெண்களே போராடுவது ஆச்சரியமாக இருக்கிறது.

‘மீ டு’ விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். ‘மீ டு’வை இன்று பலர் எல்லை தாண்டி கையில் எடுப்பது வேதனையளிக்கிறது. ‘மீ டு’வை தவறாக பயன்படுத்த கூடாது, துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.


நடிகர் கமல்ஹாசனுடன் காங்கிரஸ் இணைந்தால் கல்லறைக்கு செல்வதற்கு சமமாகிவிடும். கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது. தி.மு.க.வுடன் இருந்தால் தான் காங்கிரசுக்கு பலன் கிடைக்கும். கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் தற்கொலை செய்து கொள்வதை போல் தமிழகத்தில் காங்கிரசின் நிலைமை மாறி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்