வேன் டிரைவர் அடித்துக்கொலை: காதலியின் தந்தை உள்பட 5 பேர் கைது

பள்ளிபாளையம் அருகே வேன் டிரைவரை அடித்துக்கொலை செய்த வழக்கில் காதலியின் தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-22 22:45 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் தர்மராஜ்(வயது 27). மினிவேன் டிரைவர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெப்படையில் உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அந்த மில்லில் பள்ளிபாளையம் அருகே ஈகாட்டூர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்துக்குமார் என்பவருடைய 17 வயது மகளும் வேலை பார்த்தார். ஒரே மில்லில் வேலை பார்த்ததால் தர்மராஜூம், அந்த 17 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

இவர்களது காதல் விவகாரம் முத்துக்குமாருக்கு தெரிய வரவே அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது மகளை வேலைக்கு செல்வதை தடுத்து நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமி தையல் பயிற்சிக்கு சென்றார். அப்போது தர்மராஜ், சிறுமியை சந்தித்து ஒரு செல்போன் வாங்கி கொடுத்தார். அதன்பிறகு காதலர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து தர்மராஜிடம் செல்போனில் தனது மகள் பேசுவதை அறிந்து ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், தர்மராஜூக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தார். இதற்காக மகளிடம் செல்போனை கொடுத்து, தன்னை பெற்றோர் அடிப்பதாக கூறி வரவழைக்குமாறு கூறினார். அதன்படி அந்த சிறுமியும் தனது காதலன் தர்மராஜூக்கு போன் செய்து தான் செல்போனில் பேசி கொண்டு இருக்கும் போது பெற்றோர் பார்த்து விட்டதாகவும், தன்னை அடிப்பதாகவும், உன்னை பார்த்து பேச வேண்டும் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து காதலி அழைத்து விட்டாளே என்று நினைத்து தர்மராஜ் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் தர்மராஜ் நுழைந்தவுடன் அங்கிருந்த முத்துக்குமார் சத்தம் போட்டார். உடனே அவரும், அங்கு வந்த அவரது உறவினர்கள் ரமேஷ், சிவசக்திவேல், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சித்(எ) ரங்கராஜன் ஆகியோரும் சேர்ந்து தர்மராஜை அடித்து உதைத்தனர். பின்னர் உருட்டு கட்டையாலும் தாக்கினர். இதில் மயங்கிய அவரை வீட்டுக்கு வெளியே தூக்கி போட்டு விட்டு சென்று விட்டனர்.


பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்த போது தர்மராஜ் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முத்துகுமார், ரமேஷ், சிவசக்திவேல் ஆகிய 3 பேரும் மயங்கி கிடந்த தர்மராஜை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தர்மராஜ் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து எலந்தகுட்டை கிராம நிர்வாக அலுவலர் குருதேவன் பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் இது தொடர்பாக காதலியின் தந்தை முத்துக்குமார்(36), அவரது உறவினர்களான அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(30), சிவசக்திவேல்(34), ரஞ்சித்(எ) ரங்கராஜன்(26), ஈஸ்வரமூர்த்தி(23) ஆகிய 5 பேரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காதலனை தந்தை உறவினர்களுடன் அடித்து கொன்ற சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்