சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி 27 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியானார்கள். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 27 குழந்தைகள் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update:2018-10-23 05:15 IST
சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் தமிழக மக்களை பயத்தில் உறைய வைப்பது டெங்கு காய்ச்சல் தான்.

ஆண்டுதோறும் விசுவரூபம் எடுக்கும் டெங்கு காய்ச்சலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மக்கள் மத்தியில் பெரிய பீதியை ஏற்படுத்தி வருகிறது. எத்தனை முன் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும், வருடா வருடம் தவறாமல் உயிர்ப்பலி வாங்கும் டெங்கு காய்ச்சலின் குறி இந்த ஆண்டும் தப்பவில்லை.

அந்தவகையில் சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரை டெங்கு காய்ச்சல் நேற்று காவு வாங்கியது.

அதன் விவரம் வருமாறு:-

இரட்டை குழந்தைகள்

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு மேற்கு தணிகாசலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி கஜலட்சுமி. இவர் களுக்கு தக்‌ஷன் (வயது 7) என்ற மகனும், தீக்‌ஷா (7) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இரட்டை பிறவிகள் ஆவார்கள். இவர்கள் இருவரும் வீட்டருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்தநிலையில் குழந்தைகள் தக்‌ஷன் மற்றும் தீக்‌ஷா ஆகியோர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் தீவிரம் குறையவில்லை.

இதையடுத்து கடந்த 20-ந் தேதி கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் தக்‌ஷன், தீக்‌ஷாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

உயிரிழப்பு

அதனைத்தொடர்ந்து குழந்தைகள் இருவரும் அன்றைய தினமே சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குழந்தைகள் தக்‌ஷன், தீக்‌ஷாவுக்கு டாக்டர்கள் தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இருவரது உடல்நிலையும் மோசமடைந்தது. ரத்த அழுத்தம் குறைந்து, வலிப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள்.

ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தைகள் தக்‌ஷன், தீக்‌ஷா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தகவலை அறிந்த குழந்தைகளின் பெற்றோர் கதறி துடித்தனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதனைத்தொடர்ந்து குழந்தைகளின் உடல்கள் அவர்களது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. குழந்தைகளின் உடலுக்கு மாதவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுதர்சனம் அஞ்சலி செலுத்தினார்.

குழந்தைகளை பறி கொடுத்த சந்தோஷ்குமார் வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

27 குழந்தைகளுக்கு சிகிச்சை

இதுகுறித்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர் கூறுகையில், “உயிரிழந்த 2 குழந்தைகளும் அபாய அறிகுறிகளுடன் தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாகவும், அபாயகரமான நிலையிலும் அனுமதிக்கப்பட்டதால் தீவிர மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும், குழந்தைகளின் உடல் அதனை ஏற்கவில்லை. அதனாலேயே டாக்டர்கள் குழு எவ்வளவோ போராடியும் குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். தற்போது ஆஸ்பத்திரியில் 27 குழந்தைகள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது” என்றார்.

மேலும் செய்திகள்