குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து பயணியிடம் திருட்டு 3 பேர் கைது

குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை கொடு்த்து பயணியிடம் திருடிய 3 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-22 22:15 GMT
மும்பை,

மும்பை குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று ரோகித் சர்மா(வயது20) என்ற வாலிபர் பவன் விரைவு ரெயிலில் உத்தரபிரதேசம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் அறிமுகமாகி பேச்சு கொடுத்தனர்.

இந்தநிலையில், ரோகித் சர்மா டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது உடன் இருந்த 3 பேரும் அவருக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை சாப்பிட கொடுத்தனர்.

இதனை அறியாத சர்மா அந்த பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டார். இதில் சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 பேரும் அவரது செல்போன், ரூ.25 ஆயிரம் மற்றும் உடைமைகளை திருடிச்சென்றனர். இந்தநிலையில் மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தபோது, நடந்ததை அறிந்து சர்மா அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து குர்லா ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தாா். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த திருட்டு ஆசாமிகளின் உருவத்தை வைத்து 3 பேரையும் வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் போலீசில் சிக்கினார்கள். இதையடுத்து போலீசார் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் ராஜேஷ் பால்(38), பப்பி பார்தியா(34) மற்றும் ராஜ்குமார் கேசர்வானி(36) என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்