நிம்பல்கர் கொலை வழக்கில் அன்னா ஹசாரேவை சாட்சியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

பவன்ராஜே நிம்பல்கர் கொலை வழக்கில் அன்னா ஹசாரேயை சாட்சியாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-10-22 22:15 GMT
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்ராஜே நிம்பல்கர் கடந்த 2006-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மாநில முன்னாள் மந்திரி பதம் பாட்டீலுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பதம் பாட்டீலும் அவரின் கூட்டாளிகளும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காந்தியவாதி அன்னா ஹசாரே போலீசில் புகார் அளித்திருந்தார். எனவே அன்னா ஹசாரேவை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் செசன்சு கோர்ட்டில் முறையிட்டனர். ஆனால் கோர்ட்டு அவரை சாட்சியாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இதை எதிர்த்து உயிரிழந்த பவன்ராஜே நிம்பல்கரின் மனைவி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தன் கணவர் கொலை வழக்கில் அன்னா ஹசாரேவை சாட்சியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் அவரது மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. அன்னா ஹசாரே சாட்சியத்தால் இந்த வழக்கில் எந்த நன்மையும் ஏற்படும் என்று தெரியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்