பயணிகளிடம் திருடி மளிகை கடை வைத்த பெண்: பஸ்சில் மூதாட்டியிடம் பணம் எடுத்தபோது சிக்கினார்

கோவையில் பயணிகளிடம் திருடி மளிகை கடை வைத்த பெண், பஸ்சில் மூதாட்டியிடம் பணம் திருடியபோது போலீசில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-10-22 21:45 GMT
கோவை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டம் அதிகமாக இருக்கும் பஸ்களில் திருட்டு, ஜேப்படி சம்பவங்கள் நடப்பதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில், கோவை மேற்கு உதவி கமிஷனர் ராஜ்குமார் நவராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் மற்றும் நகைகளை திருட மதுரை, கோவில்பட்டி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த கும்பல் கோவையில் முகாமிட்டு உள்ளதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டு உமா, கார்த்திக் ஆகியோர் ஓடும் பஸ்சில் நேற்று மாறுவேடத்தில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் கோவைப்புதூரில் இருந்து ஆர்.எஸ்.புரத்துக்கு செல்லும் பஸ்சில் சென்றனர். அந்த பஸ் பூ மார்க்கெட் அருகே சென்றபோது இருக்கையில் இருந்த ஒரு மூதாட்டியிடம் இருந்து பணப்பையை பெண் ஒருவர் நைசாக எடுத்தார். அப்போது அங்கிருந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில், அவர் காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்த சிவக்குமாரின் மனைவி அனிதா தேவி (வயது 32) என்பதும் கூட்டம் அதிகமாக இருக்கும் பஸ்சில் சென்று பணம் திருடி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அனிதா தேவியை கைது செய்தனர். அந்த மூதாட்டியிடம் திருடிய பணப்பையில் ரூ.10 ஆயிரம் இருந்தது. அந்த பணத்தை போலீசார் மூதாட்டியிடம் ஒப்படைத்தனர்.

கைதான அனிதா தேவியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:- ஆசிரியர் காலனியை சேர்ந்த அனிதா தேவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜேப்படி மற்றும் பணம் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று உள்ளார். அவர் பலரிடம் திருடி இருப்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அனிதா தேவியின் புகைப்படமும் பல இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது.

எனவே மீண்டும் திருடினால் பொதுமக்கள் தன்னை எளிதாக அடையாளம் கண்டுவிடுவார்கள் என்பதற்காக அழகு நிலையத்துக்கு சென்று தன்னை அழகுபடுத்தியதுடன், அடையாளம் தெரியாமல் இருக்க முடி அழகையும் மாற்றி, பஸ்சில் சென்று பலரிடம் அவர் திருடி உள்ளார். அதில் கிடைத்த பணத்தை வைத்து ஆசிரியர் காலனியில் மளிகை கடையும் வைத்துள்ளார்.

மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கி வருவதாக கூறி தினமும் காரமடையில் இருந்து கோவைக்கு டவுன் பஸ்சில் வந்து திருட்டில் ஈடுபட்டு உள்ளார். அந்த பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தியதுடன், மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடியிருந்துள்ளார். எனவே அவர் எத்தனை பேரிடம் எவ்வளவு பணத்தை திருடி உள்ளார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்