கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 55 பேர் விண்ணப்பம்

கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 55 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2018-10-22 22:00 GMT
கோவை,

கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தராக ராமசாமி உள்ளார். இவரது பதவி காலம் அடுத்த மாதம் 17-ந் தேதியுடன் முடிகிறது. இந்தநிலையில் புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிக்காக 12-ந் தேதி வரை 55 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட் டது. இதில் 22 பேர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். வெளி மாநிலங்களை சேர்ந்த 11 பேரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஊழல் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சையும் வேளாண்பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
இவர் மீதான ஊழல் புகார், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணையில் உள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்திலும் இவரது ஊழல் புகார் தொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜேம்ஸ்பிச்சை வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்ய தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய துணைவேந்தரை, வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் முடிவு செய்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்